உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியா விளையாட வாய்ப்பு குறைந்துகொண்டு வருகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்கள் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அபாரமாக செயல்பட்டதால், இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியான ஆஸ்திரேலியாவை 3 நாட்களிலேயே வீழ்த்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள், ஸ்பின்னர் நாதன் லைன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால், 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கியுள்ள ஆஸ்திரேலிய அணியில் ஓபனர் உஸ்மான் கவாஜா 104* (251), டிராவிஸ் ஹெட் 32 (44), ஸ்டீவ் ஸ்மித் 38 (135), கேமரூன் கிரீன் 49* (64) ஆகியோர் முதல்நாள் ஆட்டத்தில் அபாரமாக விளையாடினார்கள். இதனால், முதல்நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 255/4 ரன்களை குவித்துள்ளது.
வாய்ப்பு குறைவு:
இரண்டாவது நாளிலும் பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடைசி மூன்று நாட்களில் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றுதான் கருதப்படுகிறது.
அப்படி இந்திய அணி இப்போட்டியில் தோற்கும் பட்சத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலுக்கு நேரடியாக முன்னேற முடியாது.
இதுக்காக காத்திருக்கணும்:
இந்திய அணி, அடுத்து நியூசிலாந்துக்கு, இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இந்த தொடரில் இலங்கை அணி ஒரு போட்டியிலாவது டிரா அல்லது தோற்றால்தான், இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் பைனலுக்கு முன்னேற முடியும்.
ஒருவேளை, இலங்கை அணி இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில், பைனலில் ஆஸ்திரேலிய அணியுடன் இலங்கை அணிதான் மோதும்.
வாய்ப்பு இருக்கிறது:
இலங்கை அணி இந்த இரண்டு டெஸ்ட்களிலும் வெற்றிபெற வாய்ப்பு இருக்கிறது. தற்போது, முதல் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கியுள்ள இலங்கை அணி முதல்நாளில் 305/6 ரன்களை குவித்துள்ளது.
நியூசிலாந்து அணியில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் பின்னடைவு இருப்பதால், முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. இரண்டாவது போட்டியிலும் வெற்றிபெற வாய்ப்புகள் இருப்பதால், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்திய அணி இப்படி அழுத்தங்கள் நிறைந்த போட்டிகளில் சொதப்பலாக செயல்படுவதை, சமீப காலமாகவே வாடிக்கையாக கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.