சமீபத்தில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பெங்களூரில் அதிக வாடகை வசூலிக்கப்பட்டு வருவதாக ஆதாரங்கள் கூறுகின்றன.
இந்தியாவின் சிலிக்கான் வேலி என அழைக்கப்படும் பெங்களூரில் சென்ற ஆண்டு முதலே கணிசமான முறையில் வீட்டு வாடகைகள் உயர்த்தி வந்த நிலையில் இந்த ஆண்டு உச்சத்தை தொட்டுள்ளது.
கோவிட்-19 சமயங்களில் அனைத்து நிறுவனங்களும் அதன் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்தது. அதனைத் தொடர்ந்து வெவ்வேறு மாநிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், சொந்த ஊருக்கு சென்று அவர்களில் வீட்டிலிருந்தே வேலைப் பார்க்கத் தொடங்கினர்.
அச்சமயத்தில் பெருந்தொற்று பயம் காரணமாக வாடகை வீடுகளில் குடியிருந்தவர்களும் காலி செய்து அவர்களின் சொந்த ஊருக்கே சென்று விட்டனர். அதனைத் தொடர்ந்து அனைத்து நகரங்களிலும் வாடகை வீடுகள் பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இந்நிலை மூன்று ஆண்டுகள் வரை தொடர்ந்ததால், வாடகையின் அளவை வீட்டு உரிமையாளர்கள் குறைத்திருந்தனர்.
அதிலும் பெங்களூரில்தான் முக்கிய டெக் மற்றும் சேவை நிறுவனங்களும் தொடர்ந்து இயங்க ஆரம்பித்துள்ளதால், வாடகைக்கு வீடு தேடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பெங்களூர் குடியிருப்போர் நலச்சங்கமும், வாடகை வீடு உரிமையாளர்கள் சங்கமும் வீட்டின் வாடகையை இரு மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் வீட்டு உரிமையாளர்கள் வீடு கேட்டு வரும் இளைஞர்களிடம் அவர்களின் LinkedIn விவரங்களையும் கேட்டு அதன் அடிப்படையில் வீடு தருவதாகவும் வீடு தேடுவோர் கூறிவருகின்றனர்.