வங்கி திவாலானால் வாடிக்கையாளர்களுக்கு என்னாகும்? எவ்வளவு பணம் திரும்பக் கிடைக்கும்?

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி (Silicon Valley Bank) திவாலானதை தொடர்ந்து வங்கித் துறையில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறி வருகின்றனர். சரி நம் நாடான இந்தியாவில் ஒரு வங்கி திவாலானால் வாடிக்கையாளர்களுக்கும், அவர்களின் பணத்துக்கும் என்னாகும்?

​வங்கிகள் எப்படி செயல்படுகின்றன?​

ஒரு வங்கி தனது டெபாசிட்டர்களிடம் பணத்தை பெற்று, கடனாளிகளுக்கு கடனாக வழங்குகிறது. டெபாசிட்டர்களிடம் பெற்ற பணத்துக்காக அவர்களுக்கு ஒரு குறைந்த வட்டியை வழங்குகிறது. கடனாளிகளிடம் வழங்கிய கடனுக்கு அதிக வட்டியை வசூலிக்கிறது. இந்த இரண்டு வட்டிக்கும் இடையேயான வேறுபாடுதான் வங்கிக்கான வருமானம்.

​சிலிக்கான் வேலி வங்கி திவால்​

அமெரிக்காவை சேர்ந்த சிலிக்கான் வேலி வங்கி நிதி நெருக்கடியை சந்தித்த நிலையில், வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வேகவேகமாக வெளியே எடுத்தனர். மேலும் சிலிக்கான் வேலி வங்கியின் முதலீட்டாளர்களும் வெளியேறிவிட்டனர். இதையடுத்து சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி மூடப்பட்டுவிட்டது.

​இந்தியாவில் திவாலான வங்கி​

இந்தியாவிலும் பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (Punjab And Maharashtra Bank) திவாலாகி பின்னர் மூடப்பட்டுவிட்டது. இந்த வங்கி வழங்கிய மொத்த கடன்களில் 73% மேற்பட்ட கடன்களை HDIL நிறுவனத்துக்கு மட்டும் வழங்கியதால் திவாலானது.

​வங்கிகள் திவாலாகினால் என்னாகும்?​

இந்தியாவில் வங்கி டெபாசிட்டர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. எனவே, ஒரு வங்கி திவாலாகிவிட்டால், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவரது பணத்தில் 5 லட்சம் ரூபாய் வரை செலுத்தப்பட்டுவிடும். நாட்டில் உள்ள 90% டெபாசிட்டர்களுக்கு இந்த வசதி உள்ளது.

​5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் இருந்தால் என்னாகும்?​

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கியில் 5 லட்சம் ரூபாய்க்கு குறைவாகவே பணம் வைத்திருக்கின்றனர். வங்கி திவாலாகிவிட்டால் இவர்களுக்கு பணம் கிடைத்துவிடும். எனினும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருப்பவர்களுக்கு என்னாகும்? இவர்களுக்கு, திவாலான வங்கியின் சொத்துகள் விற்பனை செய்யப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் பணம் பிரித்து செலுத்தப்பட்டுவிடும்.

​வாடிக்கையாளர்கள் என்ன செய்யலாம்?​

ஒரே வங்கியில் மொத்த பணத்தையும் குவித்து வைப்பதை தவிர்க்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் உங்கள் பணத்தை பிரித்து சேமித்து வைத்தால் அச்சம் இல்லாமல் இருக்கலாம். மேலும், நிதிநிலை பலமாக இருக்கும் வங்கிகளில் பணத்தை போட்டு வைக்கலாம்.


Posted

in

by

Tags: